ஊடகங்களின் "ஷூட்டிங் ஸ்பாட்' !
தலைநகரில் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் அதிகம் கூடும் இடம் "இந்தியா கேட்'. ராஜ்பத்தில் உள்ள இந்தப் பகுதியில் காலை தொடங்கி இரவு வரை


தலைநகரில் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் அதிகம் கூடும் இடம் "இந்தியா கேட்'. ராஜ்பத்தில் உள்ள இந்தப் பகுதியில் காலை தொடங்கி இரவு வரை சுற்றுலாப் பயணிகள் காணப்படுவர்.
இந்த நிலையில், ராஜ்பத்தில் உள்ள விஜய் செளக் பகுதி சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் வியாழக்கிழமை "ஷூட்டிங் ஸ்பாட்' போல காட்சி அளித்தது.
அந்தப் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஒளிப்பதிவு கேமராமேன்களும், செய்தியாளர்களும் கூடியிருந்தனர்.
ஆங்காங்கே சிறிய மேடைகள், அவற்றின் மீது கவர்ச்சிகர துணி விரிப்புகள், ஒளிக் காட்சி அமைப்புகள், பின்னணியில் இலச்சினையுடன் கூடிய "ஃப்ளெக்ஸ்' பலகைகள், கைகளில் ஒலிவாங்கி, தோளில் கேமராவை வைத்தவாறு பல கோணங்களிலும் அதை திருப்பி ஒளிப்பதிவில் கவனம் செலுத்தும் கேமராமேன்கள், முகத்தில் பலவித ரசங்களை வெளிப்படுத்தி ஆவேசமாகப் பேசும் நபர்கள்...
ஆம்! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் இவ்வேளையில், சில தினங்களாக ரயில்வே, மத்திய பொது பட்ஜெட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளின் செய்திகளையும், தலைவர்களின் பேட்டிகளையும் ஒளிபரப்ப, தொலைக்காட்சி ஊடகங்களின் "ஷூட்டிங் ஸ்பாட்' போல விஜய் சௌக் பகுதி களைகட்டியுள்ளது.
நேரடி ஒளிபரப்பு
நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது குறித்து செய்திகளையும், பேட்டிகளையும், பல ஆங்கில, ஹிந்தி மின்னணு ஊடக நிறுவனங்கள் விஜய் சௌக் பகுதியிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்தன.
ஒரு பகுதியில் ஐபிஎன் 7, என்டிடிவி, டைம்ஸ் நவ் மற்றும் பல ஹிந்தி சேனல்கள், இணையதள ஒளிபரப்பு (ஓபி) வேன்கள் மூலமாக நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்தன. காலை 7 மணி தொடங்கி இரவு வரை இது நீடித்தது.
மற்றொரு பகுதியில் தமிழ், கன்னடம், ஆந்திரம், மலையாளம் ஆகிய தென் மாநில மொழிகள், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாநில மொழிகளின் தொலைக்காட்சியினர் செய்திகளையும், பேட்டிகளையும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை நிதியமைச்சர்
ப. சிதம்பரம் தாக்கல் செய்த பிறகு, அது தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்காக ஆளும் கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் பிற்பகலில் விஜய் சௌக் பகுதிக்கு வந்தனர்.
மத்திய நீர் வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவத், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் வே. நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி. ராஜா, பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் உள்பட பலர் பட்ஜெட் குறித்து ஊடகத்தினருக்கு பேட்டியளித்தனர்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களின் பேட்டிகள், கருத்துகள், காரசார விவாதங்கள் ஆகியவை நேரடியாக ஒலி-ஒளிபரப்புச் செய்யப்பட்டன.
போட்டா போட்டி
ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைக்கு பட்ஜெட் தொடர்பாக அமைச்சர் ஹரீஷ் ராவத் பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.
அது முடிவதற்குள், ஹிந்தி தொலைக்காட்சி சேனலைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர்
புன்னகைத்தவாறு அவரது கையைப் பற்றி இழுத்துக்கொண்டு தனது டி.வி-யினர் அமர்ந்திருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
""பலருக்கும் பேட்டி கொடுக்க ஆர்வமாக இருக்கிறேன்'' என்று கூறிக் கொண்டே ஹரீஷ் ராவத் அவருடன் சென்றார்.
நடிகரும், மக்களவை பாஜக உறுப்பினருமான சத்ருஹன் சின்ஹாவும் பேட்டி கொடுக்கத் தவறவில்லை.
இப்படியாக விஜய் சௌக் பகுதியில் எம்.பி-க்களும், அமைச்சர்களும், அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுத்தனர்.
தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த கேமரான் மேன் கரண் சிங் கூறுகையில், "சில ஆண்டுகளாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட முக்கிய நாடாளுமன்ற நிகழ்வுகளின்போது பிரத்யேக செட்டிங், மேடை அமைத்து அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
இதற்காக பிரத்யேகமாக "ஜிம்மி ஜிப்' கேமரா கொண்டு வரப்படுகிறது. ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து சுமார் 15 முதல் 20 கேமராமேன்கள் வரை இந்த ஒளிப்பதிவு
நிகழ்வில் பணிபுரிகின்றனர். இதற்காக நாளொன்றுக்கு சுமார் ரூ. 3.50 லட்சம் செலவாகும்' என்றார்.
சுற்றுலாப் பயணிகள் வியப்பு
தலைநகரில் சுற்றுலா இடங்களைப் பார்வையிட சுற்றுலா வாகனங்களில் வருவோர் இந்தியா கேட், நாடாளுமன்ற வெளிப்புறச் சாலை பகுதி வழியாகச் செல்வது வழக்கம்.
அவர்களுக்கு நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியவற்றை வாகனங்களில் இருந்தவாறு சுற்றுலா வழிகாட்டிகள் காண்பித்து விளக்கமும் கூறுவர்.
விஜய் சௌக் பகுதி வழியாக வியாழக்கிழமை சுற்றுலா வாகனங்களில் சென்ற சிலர் வாகனத்தை நிறுத்தி போக்குவரத்துக் காவலர்களிடம், "இங்கு சினிமா ஷூட்டிங் நடைபெறுகிறதா?' என்று கேட்பதும், "இல்லை...இல்லை. இவர்கள் தொலைக்காட்சி ஊடகங்களின் கேமராமேன்கள்' என்று அவர்கள் பதில் அளித்ததையும் காணமுடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...